பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள பயங்கரவாதி நசீர் மீது சக கைதிகள் தாக்குதல்


பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள பயங்கரவாதி நசீர் மீது சக கைதிகள் தாக்குதல்
x

பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு நசீர் பயிற்சி அளித்த விவகாரம் குறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மாலனி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதி நசீரை சககைதிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக மதானி மற்றும் பயங்கரவாதி நசீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் தான் நசீர் ஆவார். இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி பெங்களூரு ஆர்.டி.நகரில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறையில் வைத்தே பயங்கரவாதி நசீர், அவரது கூட்டாளியான ஜுனைத் பயிற்சி அளித்ததுடன், மூளை சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்த்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. கைதான பயங்கரவாதிகள் முகமது உமர் (வயது 29). சையது சுகைல்கான் (24), சையத் முதாசிர் பாஷா (28), பைசல் ரப்பானி (30), ஜாகித் தப்ரேஜ் (25) ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கைதான 5 பேரும் கொலை வழக்கில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதுபோல் நசீரின் கூட்டாளியும் மற்றொரு பயங்கரவாதியுமான ஜுனைத்தும் கொலை மற்றும் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த

சந்தர்ப்பத்தில் தான் கைதான 5 பேரையும் நசீருக்கு, ஜுனைத் அறிமுகப்படுத்தியதுடன், அவர்களை மூளை சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்த்திருந்தனர்.

நாசவேலையில் ஈடுபடுவது, துப்பாக்கிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகளை பரப்பனஅக்ரஹாரா சிறையில் வைத்தே நசீரும், ஜுனைத்தும் அளித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் நேற்று முன்தினம் கைதான ஜாவித் தப்ரேஜ் வீட்டில் சிக்கிய 4 கையெறி வெடிகுண்டுகளை பெங்களூருவில் முக்கியமான இடத்தில் வெடிக்க வைக்க நசீர், ஜுனைத் ஆகியோரின் உத்தரவுக்காக 4 பேரும் காத்திருந்ததும் தெரியவந்தது.

இதனால் பரப்பனஅக்ரஹாரா சிறையையே பயங்கரவாத செயல்களுக்கான சதித்திட்டங்களை தீட்டும் இடமாக நசீர் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் ஜுனைத்துடன் சிறையில் இருந்து கொண்டே நசீர் செல்போனில் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தை சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மாலனி கிருஷ்ணமூர்த்தி தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சிறையில் வைத்தே கைதிகளுக்கு நசீர் பயங்கரவாத பயிற்சி அளித்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு, கூடுதல் டி.ஜி.பி. மாலினி கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் அதிகாரிகள் கூடிய விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் நசீரை காவலில் எடுத்து விசாரிக்க முன்வந்து உள்ளனர்.

இந்த நிலையில், பயங்கரவாதி நசீர் மீதான வழக்கில், அவரை நேற்று சிறை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அதாவது காணொலி காட்சி மூலமாக சிறையில் இருந்தபடியே நசீரை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றிருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் மது உள்ளிட்ட விசாரணை கைதிகள் பயங்கரவாதி நசீரை தாக்கியதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து கொண்டே தேசதுரோக செயல்களில் ஈடுபடுவதாக கூறி நசீரை தாக்கியதுடன், அவருக்கு எதிராக கோஷமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. கைதிகள் தாக்கியதில் நசீருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே நசீருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் மற்ற கைதிகளை சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பரப்பனஅக்ரஹாரா சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


Next Story