பயங்கரவாதி யாசினை சிவமொக்கா அழைத்து சென்று என்.ஐ.ஏ. விசாரணை


பயங்கரவாதி யாசினை சிவமொக்கா அழைத்து சென்று என்.ஐ.ஏ. விசாரணை
x
தினத்தந்தி 29 July 2023 6:45 PM GMT (Updated: 29 July 2023 6:45 PM GMT)

துங்கா ஆற்றங்கரையில் குண்டு வெடிப்பு பயிற்சியில் ஈடுபட்டதாக பயங்கரவாதி யாசினை போலீசார் சிவமொக்காவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உறவினர் வீட்டில் அவர் பதுக்கி வைத்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவமொக்கா:-

குக்கர் குண்டு வெடிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பம்ப்வெல் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் வெடி குண்டை எடுத்து சென்ற பயங்கரவாதி ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஷாரிக் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும், போலீசார் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஷாரிக்கை கைது செய்தனர்.

அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில், பயங்கரவாதிகளான யாசின், மாஸ் முனீர் ஆகியோருடன் தொடர்பில் இருந்தது தெரிந்தது. ஏற்கனவே யாசின், முனீர், வீரசாவர்கர் படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடையவர்கள். ஏற்கனவே அந்த வழக்கில் 2 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

துங்கா ஆற்றங்கரையில் குண்டு வெடிப்பு

இதற்கிடையில் இவர்கள் 3 பேரும் ஒரே கல்லூரியில் தங்கி படித்து வந்தது தெரிந்தது. மேலும் சிவமொக்கா ஆற்றங்கரையோரம் நடந்த குண்டு வெடிப்பில் இவர்கள் 3 பேரும் கூட்டாக இணைந்து செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் யாசினை சிவமொக்கா துங்காஆற்றங்கரையோரங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி இந்தநிலையில் நேற்று அவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிவமொக்காவில் உள்ள துங்கா ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் குண்டு வெடிப்பு பயிற்சியில் ஈடுபட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர் அதிகாரிகளிடம் குண்டு வெடிப்பு பயிற்சியில் ஈடுபட்டதை நடித்து காட்டினார்.

யாசின் உறவினர் வீட்டில் சோதனை

அதே நேரத்தில் சிக்கல் பகுதியில் உள்ள யாசினின் உறவினரின் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஜெலட்டின் குச்சிகள், டைமர்கள் உள்பட வெடி பொருள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதை கைப்பற்றிய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷாரிக்கிடம் விசாரணை

இதேபோல மற்றொரு புறம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக்கிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி ஷாரிக்கை தேசிய புலனாய்வு அதிகாரிகள் மடிகேரி, மங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதாவது மடிகேரியில் அவர் எந்த இடத்தில் பஸ் ஏறினார். எங்கு தங்கினார். எப்படி மங்களூரு வந்தார் என்பதை கேட்டு, அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது ஷாரிக்கை மைசூரு அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story