ராகுல்காந்தியிடம் விசாரணை: பழிவாங்கும் அரசியலில் பா.ஜனதா ஈடுபடுகிறது- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


ராகுல்காந்தியிடம் விசாரணை: பழிவாங்கும் அரசியலில் பா.ஜனதா ஈடுபடுகிறது-  டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x

ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதன் மூலம் பா.ஜனதா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு:

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது மற்றும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருப்பது குறித்து விவாதிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எல்.எல்.சி.க்கள் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரும்படி கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் வைத்து நேற்று டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பி உள்ளது. தற்போது அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மன தைரியத்தை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளில் பா.ஜனதா ஈடுபடுகிறது. இந்த் அவிவகாரத்தில் ராகுல்காந்தியிடம் 54 மணிநேரம் விசாரணை நடத்தியது ஏன்?. அவர்களின் நோக்கம் ராகுல்காந்திக்கு தொந்தரவும், தொல்லை கொடுப்பதும் மட்டுமே ஆகும். இந்த விவகாரத்தில் இருந்து சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் நிரபராதியாக வெளியே வருவார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story