காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து மறியல்


காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து மறியல்
x

சக்லேஷ்புரா தாலுகாவில் காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் போலீசாருக்கு இடையூறு செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹாசன்:-

காட்டுயானை தாக்கி பலி

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா வடூர் கிராமத்தில் காட்டுயானை தாக்கி நேற்று முன்தினம் பூர்ணிமா(வயது 37) என்ற பெண் பலியானார். இந்த நிலையில் நேற்று அவரது உடல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பூர்ணிமாவின் உடலை அவரது குடும்பத்தினர் வடூர் கிராமத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர்.

அங்கு வைத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் திடீரென ஆம்புலன்சை பூர்ணிமாவின் குடும்பத்தினர் நிறுத்தினர்.

கோஷம்

பின்னர் அவர்கள் பூர்ணிமாவின் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிராம மக்களும் பங்கேற்றனர். அப்போது பூர்ணிமாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரது இழப்பை ஈடுகட்ட ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரையும் பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

கைது

இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எடேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், ஜானேகெரே கிராமத்தைச் சேர்ந்த சாகர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story