காதலரை மணமுடிக்க கனடாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்


காதலரை மணமுடிக்க கனடாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
x

காதலரை திருமணம் செய்வதற்காக கனடாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்ணை காணாமல் குடும்பத்தினர் 6 மாதங்களாக தேடி வந்தனர்.

சண்டிகர்,

அரியானாவின் ரோத்தக் நகரை சேர்ந்த இளம்பெண் நீலம் (வயது 23). இவர், ஆங்கில புலமைக்கான சர்வதேச தேர்வு ஒன்றில் வெற்றி பெற்று கனடா நாட்டுக்கு வேலைக்கு சென்று உள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் நீலம் இந்தியாவுக்கு வந்து உள்ளார்.

ஆனால், அதன்பின்னர் அவரை பற்றிய தகவல் குடும்பத்தினருக்கு தெரியவரவில்லை. இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தும் எந்தவித பலனும் கிடைக்காத நிலையில், நீலம் குடும்பத்தினர் அரியானா உள்துறை மந்திரி அனில் விஜ்ஜை நேரில் சந்தித்து விசாரணையை விரைவுப்படுத்த உத்தரவிட கோரினர்.

இளம்பெண் நீலமின் சகோதரியும் கடந்த ஜூன் இறுதியில் போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த வழக்கு பின்பு பிவானியில் உள்ள சி.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை செய்து, சுனில் என்பவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்தனர்.

இதில், நீலம் மற்றும் சுனில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். சுனில் அழைத்ததன் பேரில் நீலம் கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவருடன் சுனில் ஒன்றாக சுற்றியுள்ளார்.

எனினும், கடந்த ஆண்டு ஜூனில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுனில் துப்பாக்கியால் 2 முறை சுட்டதில், தலையில் பலத்த காயம் அடைந்து நீலம் உயிரிழந்து உள்ளார்.

அதன்பின் தடயங்களை அழிக்கும் முயற்சியில் சுனில் ஈடுபட்டு உள்ளார். அவரது வயலில் நீலமின் உயிரற்ற உடலை சுனில் புதைத்து விட்டார். அதனை மீட்டுள்ள சி.ஐ.ஏ., சோனிபத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். நீலமின் தாயார் உதவியுடன் மரபணு சோதனை நடைபெற உள்ளது.

சுனில் கடந்த காலங்களில் கொலை மற்றும் சட்டவிரோத வகையில் கைத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருத்தல் உள்பட பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்து உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றிய விவரம் எதுவும் அறியாமல் சுனிலை காதலித்து, அவரையே திருமணம் செய்வதற்காக கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய இளம்பெண் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகம் ஏற்படுத்தி உள்ளது.


Next Story