2026ம் ஆண்டுக்குள் நாட்டின் முதல் புல்லட் ரெயில்; மத்திய மந்திரி நம்பிக்கை
ஆமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்ட வளர்ச்சி பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று பார்வையிட்டார்.
சூரத்,
நாட்டின் முதல் புல்லட் ரெயில் குஜராத்தின் ஆமதாபாத் நகர் மற்றும் மராட்டியத்தின் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.1.1 கோடி திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ரெயிலானது மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். 12 நிலையங்களை இணைக்கும். மொத்தம் 508 கி.மீ. தொலைவை கடக்கும். இதனால், இரு நகர பயண இடைவெளி 6 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரம் ஆக குறையும்.
இதனை முன்னிட்டு, ஆமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்ட வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்காக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று சூரத் நகருக்கு சென்றார். அவருடன் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இதன்பின் பார்வையிட்டு விட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நாட்டின் முதல் புல்லட் ரெயிலை சூரத் மற்றும் பிலிமோரா பகுதிகளுக்கு இடையே 2026ம் ஆண்டுக்குள் இயக்கும் நம்பிக்கை உள்ளது.
அதற்கான பணிகள் விரைந்து நடந்து கொண்டிருக்கின்றன. புல்லட் ரெயில் திட்டத்திற்கான உள்கட்டமைப்பு பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.