குழந்தைக்கு பெயர் வைத்த கோர்ட்டு... கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்
விவாகரத்து வழக்கு காரணமாக மகளுக்கு பெயர் வைப்பதில் தாய், தந்தைக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்த கேரள ஐகோர்ட்டு அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது.
திருவனந்தபுரம்,
குடும்ப சண்டை, விவாகரத்து வழக்கு காரணமாக மகளுக்கு பெயர் வைப்பதில் தாய், தந்தைக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்த கேரள ஐகோர்ட்டு அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது.
கேரள மாநிலம், ஆலுவா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மகள் பிறந்த பிறகு, குடும்பச் சண்டை காரணமாக இருவரும் பிரிந்து விவகாரத்து செய்ய முயன்றனர். இதனால், குழந்தையை பராமரித்து வரும் தாயாரால் பெயர் வைக்க முடியாமல் போனது. குழந்தையின் தாயார், புண்யா என்ற பெயரையும், குழந்தையின் தந்தை, பத்மா நாயர் என்ற பெயரையும் வைப்பதாக இருந்தது.
குழந்தைக்கு பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், பெயர் இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை. இதையடுத்து, தனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தனது கணவருக்கு உத்தரவிடுமாறு கேரள ஐகோர்ட்டில் குழந்தையின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பெற்றோருக்கு இடையேயான தகராறைத் தீர்த்து வைத்த பிறகு பெயர் வைப்பது கால தாமதத்துக்கு வழி வகுக்கும் என்பதால், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தந்தை பரிந்துரைத்த பெயரையும், தாயார் பரிந்துரைத்த பெயரையும் சேர்த்து, புண்யா பி. நாயர் என்று பெயர் வைத்தார்.