சிவமொக்காவில் கத்திக்குத்தில் காயமடைந்த துணிக்கடை உரிமையாளர் சாவு; போலீஸ் விசாரணை


சிவமொக்காவில் கத்திக்குத்தில் காயமடைந்த துணிக்கடை உரிமையாளர் சாவு; போலீஸ் விசாரணை
x

சிவமொக்காவில் கத்திக்குத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த துணிக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவமொக்கா;

முன்விரோதம்

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் துணிக்கடை உள்ளது. இவரது நண்பர் சந்தோஷ். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வந்தது. கடந்த 8-ந் தேதி செந்தில் தனது துணிக்கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த சந்தோஷ், அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த செந்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். உடனே சந்தோஷ் அங்கிருந்து தப்பி சென்றார்.

வலைவீச்சு

இதற்கிடையே சம்பவம் குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்திலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி செந்தில், ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். பின்னர், தகவல் கிடைந்து ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இருந்த போலீசார், அதனை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள சந்தோசை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story