சிறுநீர் கழிக்க அவசரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி...


சிறுநீர் கழிக்க அவசரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி...
x

மத்திய பிரதேசத்தில் சிறுநீர் கழிக்க அவசரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய நபருக்கு ரூ.6 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் அப்துல் காதிர். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மத்திய பிரதேசத்தின் போபால் நகருக்கு வந்துள்ளார்.

அதன்பின்னர் அவர்கள் மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி நகருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்காக போபாலில் கமலாபதி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, காதிருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றியுள்ளது. ஆனால் ரெயில் நிலையத்தில் கழிவறை எதுவும் காணப்படவில்லை.

இதனால், உடனடியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, அதில் இருந்த கழிவறையை பயன்படுத்தி உள்ளார். அதன்பின்பே அவருக்கு சோதனை காலம் தொடங்கி உள்ளது. கழிவறையில் இருந்து வெளியே வந்த அவரால், ரெயிலை விட்டு வெளியே வர முடியவில்லை. கதவுகள் பூட்டியிருந்தன. ரெயிலும் புறப்பட்டு இருந்தது.

அவர் உடனடியாக போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகரை அணுகி உதவி கேட்டிருக்கிறார். ஆனால், கதவை ரெயில் ஓட்டுநரே திறக்க முடியும் என பதில் வந்துள்ளது. அதன்பின் ஓட்டுநரிடம் விவரம் கூறியதும் அவர் ரெயிலை நிறுத்தினார்.

ஆனால், டிக்கெட் இன்றி ரெயிலில் ஏறிய அவருக்கு ரூ.1,020 அபராதம் விதிக்கப்பட்டது. ரெயிலில் இருந்து உஜ்ஜைன் நகரில் கீழே இறங்கிய அவர், பழையபடி குடும்பத்தினரை பார்க்க பேருந்தில் ஏறி ரூ.750 கட்டணம் செலவழித்து சென்றுள்ளார்.

அவருடைய குடும்பத்தினர் கணவரை காணாமல் போபாலில் பரிதவித்து நின்று உள்ளனர். சிங்ராவ்லிக்கு செல்லும் ரெயிலில் போக வேண்டாம் என முடிவு செய்து ரெயில் நிலையத்திலேயே நின்று விட்டனர்.

இதற்கான ரெயில் டிக்கெட் கட்டணம் என ரூ.4 ஆயிரம் வரை வீணானது. மொத்தத்தில், அப்துல் காதிருக்கு ரூ.5,770 இழப்பு ஏற்பட்டது.


Next Story