தி கேரளா ஸ்டோரி உண்மையான நிலையை தவறாக சித்தரிக்கிறது: சசி தரூர் எம்.பி.


தி கேரளா ஸ்டோரி உண்மையான நிலையை தவறாக சித்தரிக்கிறது:  சசி தரூர் எம்.பி.
x

தி கேரளா ஸ்டோரி படம், கேரளாவின் உண்மையான நிலையை தவறாக சித்தரிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் வருகிற 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

எனினும், அதன் டிரைலரில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால், கேரளாவின் உண்மையான நிலையை படம் தவறாக சித்தரிக்கிறது என தெரிவித்து உள்ளார். மதிப்புமிக்க, வெளிப்படுத்தும் சுதந்திரம், அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக நிறுத்தப்பட கூடாது.

ஆனால், இது நம்முடைய உண்மை நிலையை தவறாக வெளிப்படுத்துகின்றது என உரக்கவும் மற்றும் தெளிவாகவும் கூறுவதற்கான ஒவ்வோர் உரிமையும் கேரளவாசிகளுக்கு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

இது உங்களுடைய கேரளா ஸ்டோரி, நம்முடைய கேரளா ஸ்டோரி அல்ல என தெரிவித்திருந்த நிலையில், இந்த பதிவை அவர் வெளியிட்டு உள்ளார்.

இதுபற்றி கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் சமீபத்தில் தனது பேஸ்புக்கில், சிறுபான்மை குழுக்களின் மீது சந்தேக நிழலை சுமத்தி, சமூக பிரிவைனையை உருவாக்கும் சங் பரிவாரின் செயல் திட்டங்களை அமல்படுத்தும் ஒரு முயற்சியின் பகுதியாக இந்த படம் அமைந்து உள்ளது என்று குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.


Next Story