'சேக் ஷாஜகானிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்


சேக் ஷாஜகானிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்
x

தேர்தல் வரை ஓய்வெடுக்கலாம் என்பதற்காக சேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஷேக் ஷாஜகான். இவரும், இவருடைய ஆதரவாளர்களும் சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர் என்றும் அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டனர் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த வழக்கில் சேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து வந்த சேக் ஷாஜகான் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதனிடையே சேக் ஷாஜகான் சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"திரிணாமுல் காங்கிரஸ் சி.ஐ.டி.யை அடிமைப்படுத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது சேக் ஷாஜகானை சி.ஐ.டி.யால் எப்படி விசாரிக்க முடியும்? அடிமைக்கு எஜமான் பதில் சொல்வாரா? சேக் ஷாஜகான் அவர்களின் எஜமான். அவரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதிகாரிகள் தங்கள் வேலையை பணயம் வைப்பார்களா?

தேர்தல் வரை சில நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்பதற்காக சேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.டி. அவருக்கு மட்டன், புலாவ், பிரியாணி கொடுத்து உபசரிக்கும். அவர்களுக்கு பதில் சொல்ல அவர் அங்கு செல்லவில்லை. அங்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். அவரை ஓய்வெடுக்குமாறு மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் வந்தவுடன் அவர் மீண்டும் செயல்படத் தொடங்குவார்."

இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story