நிலவில் தரையிறங்க போட்டியிடும் இந்திய-ரஷிய விண்கலங்கள்
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இந்தியாவின் சந்திரயான்-3 மற்றும் ரஷியாவின் லூனா-25 விண்கலங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுடெல்லி,
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து 'லேண்டர்' நேற்று வெற்றிகரமாக பிரிந்தது.
நிலவில் 23-ந்தேதி தரை இறங்கும் இந்த லேண்டர் சாதனத்துக்குள் உள்ள 'ரோவர்' தனது ஆய்வை தொடங்கும்.
ரஷிய விண்கலம்
இதற்கிடையே, இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 10-ந்தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது.
லூனா-25 விண்கலம், நேரடியாக நிலவை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் எடை 1,750 கிலோ மட்டுமே. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்தின் எடை 3,800 கிலோ.
11 நாட்களில் இறங்குகிறது
எனவே, சந்திரயானை விட வேகமாக நிலவை நெருங்கி உள்ளது. அதன் எரிபொருள் சேமிப்பு திறனும் அதிகம். எனவே, சந்திரயானுக்கு முன்பாகவே, வருகிற 21-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏவப்பட்ட 11 நாட்களில் தரையிறங்குகிறது.
இந்தியா-ரஷியா இடையிலான இந்த போட்டி சூடுபிடித்துள்ளது.
நிலவின் தென்துருவம், நீர்வளம் நிறைந்ததாக கருதப்படுகிறது. தனித்துவமான புவியியல் அம்சங்களை கொண்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கான வளங்கள் அங்கு இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இந்தியாவும், ரஷியாவும் போட்டியிடுகின்றன.
விஞ்ஞானிகள் கருத்து
இதுதொடர்பாக 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கே.சிவன், பெங்களூருவில் உள்ள இந்திய வான்இயற்பியல் நிலைய விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-
அடுத்தடுத்து விண்கலங்கள் வருவது நிலவின் மேற்பரப்பில் எதையும் மாற்றி அமைக்காது. ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் கிடைக்கும் தகவல்கள், நிலவின் கடந்த காலத்தையும், சிறப்பம்சங்களையும் தெரிந்து கொள்ள உதவும்.
ரஷியாவும் நிலவை ஆய்வு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளிடையிலான போட்டி, மக்களிடையே ஆர்வத்தை தூண்டுவதுடன், புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உதவும்.
வருங்கால ஆய்வுக்கு உதவும்
ஆரோக்கியமான போட்டியானது, வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும். ஒரு நாடு, மற்ற நாட்டின் கண்டுபிடிப்புகளிலும், பின்னடைவுகளிலும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
எனவே, இந்த ஆய்வு, வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு பாதை அமைக்கும். நிலவின் மர்மங்களை புரிந்துகொள்ள உதவும் என்று அவர்கள் கூறினார்.