பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரே மாற்று மருந்து ஆம் ஆத்மி மட்டுமே; கெஜ்ரிவால் பேச்சு


பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரே மாற்று மருந்து ஆம் ஆத்மி மட்டுமே; கெஜ்ரிவால் பேச்சு
x

பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரே மாற்று மருந்து ஆம் ஆத்மி கட்சி மட்டுமே என குஜராத்தில் நடந்த பேரணியில் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.



வதோதரா,



குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியா, குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் பேசும்போது, மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் என்று கூறினார்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் தலைமையில் குஜராத்தில் இன்று பேரணி நடைபெற்றது. இதற்காகமெஹ்சானா நகருக்கு வந்த அவர், பழைய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியளவில் பேரணியை தொடங்கினார்.

இதில், ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொண்டர்கள் பலர், மூவர்ண கொடியுடன் கெஜ்ரிவாலை பின் தொடர்ந்தனர்.

இந்த பேரணியில் பேசிய கெஜ்ரிவால், பா.ஜ.க.வுக்கு எதிராக எதனை பற்றி பேசவும் மக்கள் பயப்படுகின்றனர். காவி கட்சிக்கு எதிரான மாற்று மருந்து ஆம் ஆத்மி கட்சி மட்டுமே என கூறினார்.

அவர் பேரணியில் தொடர்ந்து பேசும்போது, உண்மையில் குஜராத்தின் முதல்-மந்திரி போன்று சி.ஆர். பாட்டீல் செயல்படுகிறார். அவர் என்னை பார்த்து திருடன் என்கிறார். நான் பள்ளி கூடங்களை கட்டியுள்ளேன். மருத்துவமனைகளை கட்டியிருக்கிறேன்.

இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கி இருக்கிறேன். அவர்களே உண்மையான திருடர்கள் என்று கூறியுள்ளார். பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, குஜராத்திலும் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த பேரணியை முடித்து விட்டு ஆமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு இன்றிரவு கெஜ்ரிவால் திரும்புகிறார்.


Next Story