கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தது


கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

கவா்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தன்பேரில் கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தது. இதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பெங்களூரு:

மதமாற்ற தடை சட்டம்

கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா ெகாண்டுவரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கடும் அமளிக்கு இடையே அப்போது சட்டசபையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் கர்நாடக மேல்-சபையிலும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேல்-சபையில் பா.ஜனதா பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேறாமல் போனது. அதன் பின்னர் கர்நாடக மேல்-சபையில் காலியான பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதனால் மேல்-சபையில் பா.ஜனதா தனிபலம் பெற்றது.

மேல்-சபையில் தாக்கல்

இதையடுத்து கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அரசு தீவிரம் காட்டி வந்தது. அதன்படி கடந்த 16-ந்தேதி நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கர்நாடக மேல்-சபையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேற்று கர்நாடக மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே மாநில அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

இருசபைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதால், கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதாவை கர்நாடக அரசு அனுப்பி வைத்தது.

அமலுக்கு வந்தது

இந்த நிலையில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் இந்த மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இதுவரை அமலில் இருந்த மதமாற்ற தடை அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின்படி, கட்டாய மதம் மாற்றம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Next Story