நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலை உயர்வு பற்றி அடுத்த வார தொடக்கத்தில் விவாதம்


நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலை உயர்வு பற்றி அடுத்த வார தொடக்கத்தில் விவாதம்
x

நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலை உயர்வு பற்றி அடுத்த வாரம் தொடக்கத்தில் விவாதிக்கப்படும் என வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன.



புதுடெல்லி,



நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு வரை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில், 18 அமர்வுகள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

ஆனால், எதிர்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினமும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 19 பேர் இந்த வாரம் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அமைதி காக்குமாறு அவையை நடத்திய துணை தலைவர் ஹர்வன்ஷ் தொடர்ந்து வலியுறுத்திய போதும், அவர்கள் அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாகவே, அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர் என பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 பேர், தி.மு.க.வை சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒருவர் என 19 எம்.பி.க்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் இன்று காலை தொடங்கின. அதில், அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், அவை நடவடிக்கையில் இடையூறு ஏற்படுத்தி, அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்ஜய் சிங், இந்த வாரத்தின் மீதமுள்ள நாட்களில் அவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுகிறார் என தெரிவித்து உள்ளார்.

சஞ்ஜய் சிங் அவை நடவடிக்கையின் போது நேற்று, அவை தலைவரை நோக்கி காகிதங்களை வீசியுள்ளார். அதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வாரத்திற்கு அவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரே முறையில் அதிக அளவிலான உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதில், இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும்.

கடந்த ஆண்டு நவம்பரில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டதற்காக குளிர்கால கூட்டத்தொடர் முழுமைக்கும் 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலை உயர்வு பற்றி அடுத்த வாரம் தொடக்கத்தில் விவாதிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் 10 பேர் அவை தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் விவகாரம் பற்றி பேசியதுடன், விலை உயர்வு பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எம்.பி.க்கள் சஸ்பெண்டு திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டனர். எனினும், தவறான நடத்தைக்கு வருத்தம் தெரிவித்த பின்னரே அது சாத்தியப்படும் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


Next Story