தேர்தல் பத்திரங்கள் விற்பனை இன்று தொடங்குகிறது
தேர்தல் பத்திரங்கள் விற்பனை இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி,
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்தல் பத்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் அவ்வப்போது விற்பனை செய்யப்படும்.
அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளில் இந்த பத்திரங்கள் கிடைக்கும். தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் சென்னை பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடிமகனாக உள்ள யாரும் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவோ பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம். சட்டசபை அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற, பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த பத்திரங்களை பெற முடியும். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உள்ள தங்களது கணக்கில் இந்த பத்திரங்களை செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ள இயலும்.