சபரிமலையில் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு நீங்கியது
சபரிமலையில் பக்தர்களுக்கு அரவணை பிரசாதம் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
சபரிமலை,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகர விளக்கு பூஜை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையே சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூட்டம் அலைமோதுகிறது.
தற்போது, சபரிமலையில் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது. மும்பையில் இருந்து சர்க்கரை வரத்து தாமதமானதால் அரவணை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அரவணை தட்டுப்பாடு ஏற்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐயப்ப பக்தர்களுக்கு அரவணை பிரசாத வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக சபரிமலை செயல் அதிகாரி கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.