'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி கேரளா ஸ்டோரி நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தி கேரளா ஸ்டோரிக்கு கிளம்பிய எதிர்ப்பு அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகும்படி சுப்ரீம் கோர்ட்டு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தி கேரளா ஸ்டோரி திரைப்பட வெளியீட்டிற்கு தடை விதிக்க கோரிய 2-வது வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.