பெண்ணை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்; 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
ராஜஸ்தானில் பெண் ஒருவரை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பெண் ஒருவரை மரத்தில் 7 மணிநேரம் வரை கட்டி வைத்த அவரது கணவர் மற்றும் கணவரின் உறவினர்கள், கம்புகளை கொண்டு அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஏனெனில், கணவரின் நண்பருடன் அந்த பெண் இருந்துள்ளார். இதனை பார்த்ததில் ஆத்திரமடைந்த அந்த கணவர், பெண்ணுக்கு தண்டனை கொடுக்கும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்.
அந்த ஆண் நபருக்கும், இதேபோன்ற தண்டனையை அவர்கள் வழங்கி உள்ளனர். அவரையும் மரத்தில் கட்டி வைத்ததுடன், அந்த கும்பல் கேள்வி கேட்டு கொண்டே அடித்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு பின்பு வீடியோ வெளிவந்துள்ளது.
இதுபற்றி அறிந்ததும், நேற்றிரவு போலீசார் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர், 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை குறிப்பிட்டு, ராஜஸ்தானில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். வீடியோவை ஆய்வு செய்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்த அவர், இந்த அரசிடம் இருந்து இதனை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என ஆளும் காங்கிரஸ் அரசை குறை கூறும் வகையில் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தேசிய மகளிர் ஆணையமும் ராஜஸ்தான் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்யும்படி கேட்டு கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறந்த மருத்து சிகிச்சை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.