நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் தங்கநகைகள் `அபேஸ்'


நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் தங்கநகைகள் `அபேஸ்
x
தினத்தந்தி 4 Nov 2022 6:45 PM GMT (Updated: 4 Nov 2022 6:47 PM GMT)

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் `அபேஸ்' செய்யப்பட்ட சம்பவம் உப்பள்ளியில் நடந்துள்ளது.

உப்பள்ளி:

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா துர்கத்பைல் அருகே உள்ள காந்தி மாா்க்கெட் பகுதியில் சந்தோஷ் என்பவர் தங்கநகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் சந்தோசின் கடைக்கு வந்துள்ளார். அவர் தான் கிம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். அப்போது அவர் சுமார் ரூ.1.90 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை வாங்கி உள்ளார். பின்னர் அதற்கான பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நம்பர் பணம் அனுப்பி வைத்துவிட்டதாக கூறிவிட்டு நகைகளுடன் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனை சந்தோஷ் நம்பி உள்ளார். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர் சந்தோஷ் தனது வங்கி கணக்கு விவரங்களை சோதனை செய்துள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை என தெரிகிறது. இதைக்கண்டு சந்தோஷ் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அவருக்கு நகை வாங்கி சென்ற நபர் தன்னை நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மர்மநபர் முககவசம் அணிந்திருந்ததால் அவரது முகம் சந்தோசிற்கு தெரியவில்லை. உடனே அவர் இதுகுறித்து உப்பள்ளி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபரை தேடிவருகின்றனர்.


Next Story