திருட்டு வழக்குகளில் பெண், மருமகன் உள்பட 8 பேர் கைது


திருட்டு வழக்குகளில் பெண், மருமகன் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு வடக்கு மண்டலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் அத்தை, மருமகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.83¾ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு வடக்கு மண்டலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் அத்தை, மருமகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.83¾ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

அத்தை, மருமகன் கைது

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எசருகட்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்க நகைகள், பணம், வீட்டு முன்பு நின்ற ஜீப்பை திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் பெயர் மகாதேவம்மா, அவரது மருமகன் வெங்கடேஷ், அர்ஜூன், ரகு, கணேஷ் என்று தெரிந்தது. இவர்களில் வெங்கடேஷ், அர்ஜூன், ரகு பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவார்கள். அந்த தங்க நகைகளை மகாதேவம்மா மற்றும் கணேஷ் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தனர்.

ஜீப் வாங்கிய கும்பல்

அதன்படி, கடந்த மாதம் 4-ந் தேதி எசருகட்டாவில் உள்ள வீட்டில் மட்டும் ரூ.61¾ லட்சம் மதிப்பிலான நகை, பணம், பொருட்களை அந்த கும்பலினர் திருடி இருந்தார்கள். திருட்டு நகைகளை விற்று கிடைத்த பணத்தில் ஜீப், மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் வாங்கியது தெரியவந்தது. சோழதேவனஹள்ளி, கொடிகேஹள்ளி உள்ளிட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேரும் திருடி வந்தது தெரிந்தது.

கைதான 5 பேரிடம் இருந்தும் ஒரு ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள், விலை உயர்ந்த செல்போன்கள் உள்பட ரூ.61¾ லட்சம் மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர். இவர்களது கூட்டாளிகள் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

ரூ.22 லட்சம் நகைகள்

இதுபோல், ராஜகோபால்நகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கைதான 8 பேர் மீதும் சோழதேவனஹள்ளி மற்றும் ராஜகோபால்நகர் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story