சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க அக்காள் வீட்டில் திருடிய வாலிபர் கைது
பெங்களூருவில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க அக்காள் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.31 லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு
பெங்களூருவில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க அக்காள் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.31 லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள் திருட்டு
பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சவிதா. கடந்த 3-ந்தேதி இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த 613 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதுபற்றி அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட நகைகள் மட்டுமே திருட்டுப்போய் இருந்ததால், வெளியில் இருந்து யாரும் வந்து நகைகளை திருடி சென்றிருக்க வாய்ப்பில்லை என்று சவிதாவும், அவரது கணவரும் உறுதி செய்தார்கள்.
இந்த நிலையில் சவிதாவுக்கு, தனது சித்தியின் மகனான அஜீத் (வயது 26) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது.
கொலை மிரட்டல்
இதையடுத்து, அஜீத்தை ரகசியமாக சவிதா கண்காணித்தார். அவர் சமையல் அறையில் இருந்தபோது படுக்கை அறைக்கு சென்ற அஜீத் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருட முயன்றார். அப்போது அங்கு வந்த சவிதா அஜீத்தை மடக்கி பிடித்தார். உடனடியாக தனது கணவருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே அஜீத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது தனக்கு கடன் இருப்பதால் நகைகளை திருடி அடகு வைத்து விட்டதாகவும், ஓரிரு நாட்களில் நகைகளை திருப்பி தந்து விடுவதாகவும் அஜீத் கூறினார்.
இதையடுத்து, போலீசில் புகார் அளிக்காமல் சவிதா இருந்து விட்டார். இதற்கிடையில், அஜீத் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை தொடர்பு கொண்டு நகைகளை கொடுக்கும்படி கேட்டதற்கு, சவிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், நகைகளை திரும்ப கொடுக்க மாட்டேன் என்று அஜீத் கூறி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்தை தேடிவந்தனர்.
ரூ.31 லட்சம் நகைகள்
இந்த நிலையில், தலைமறைவாக இருநத அஜீத்தை பேடராயனபுரா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளியை சேர்ந்த அஜீத் தனது பெரியம்மாவின் மகளான சவிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
சூதாட்டத்தில் பணத்தை இழந்த அஜீத், ஏராளமானவா்களிடம் கடனும் வாங்கி இருந்தார். அந்த கடனை அடைக்க சகோதரி சவிதா வீட்டில் திருடியது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சவிதா வீட்டில் திருடிய ரூ.31 லட்சம் மதிப்பிலான 613 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கைதான அஜீத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.