கார்களின் பின்புற இருக்கை பயணிகளின் பாதுகாப்பை கருதி ஏர்பேக் கட்டாயமாக்க அரசு ஆலோசனை - மந்திரி நிதின் கட்காரி
பின்புற இருக்கை பயணிகளுக்கு, இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
புதுடெல்லி,
இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் டூயல் ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில்
இன்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கூறுகையில்,
நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் படி, அனைத்து கார்களிலும் முன்பக்கத்தில் இருந்து பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு "ஏர்பேக்" எனப்படும் பாதுகாப்பு அம்சம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பின்புற இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு, இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, சட்டம் இயற்றப்படவில்லை. அது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
இதன் முலம், பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்போரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், விபத்து ஏற்படும் தருணத்தில் பாதுகாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.