படப்பிடிப்புக்கு காஷ்மீரை விட சிறந்த இடம் இருக்க முடியாது; அமிதாப் காந்த் பேச்சு


படப்பிடிப்புக்கு காஷ்மீரை விட சிறந்த இடம் இருக்க முடியாது; அமிதாப் காந்த் பேச்சு
x

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முழு அளவிலான ஆதரவை அரசு வழங்கும் என அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜி-20 3-வது சுற்றுலா பணிக்குழு மாநாடு இன்று நடந்தது. இதில், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஜி-20 மாநாட்டுக்கான இந்திய குழு தலைவர் அமிதாப் காந்த் பேசும்போது, திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக்கு காஷ்மீரை விட சிறந்த இடம் இருக்க முடியாது என கூறினார்.

திரைப்படங்கள் எடுப்பதற்கு உதவியாக, அதற்கான வழிகள் மற்றும் படப்பிடிப்புக்கான தளங்கள் ஆகியவற்றை நாங்கள் (மத்திய அரசு) அமைத்து கொடுப்போம். வேறு எந்த பகுதியில் இருந்தும் காஷ்மீரில் படத்தின் படப்பிடிப்பை மாற்றுவதற்கும் நாங்கள் உதவுவோம்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முழு அளவிலான ஆதரவு அரசால் அளிக்கப்படும் என அவர் அப்போது கூறினார். இதேபோன்று, டிராவல்ஸ் ஒன்றின் தலைவர் அபிஜீத் பாட்டீல் கூறும்போது, ஜி-20 மாநாட்டை காஷ்மீரில் வைத்து நடத்துவது, காஷ்மீரில் உள்ள மக்களுக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கிய உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியால், திரைப்பட ஷூட்டிங்கிற்கு ஏற்ற பாதுகாப்பான இடம் காஷ்மீர் என்ற செய்தி சென்று சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இரவு தொடங்கியதும், ஜி-20 மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு குழுவினர் காஷ்மீரில் சிறப்பு பெற்ற படகு சவாரியில் ஈடுபட்டனர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் அவர்கள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.


Next Story