சரத்பவார் இருக்கும்போதே கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் - சஞ்சய் ராவத்


சரத்பவார் இருக்கும்போதே கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் - சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 9 Oct 2023 11:15 PM GMT (Updated: 10 Oct 2023 7:25 AM GMT)

சரத்பவார் இருக்கும்போதே, கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த ஜூலை மாதம் 2 ஆக உடைந்தது. அந்த கட்சி சரத்பவார், அஜித்பவார் தலைமையில் 2 அணியாக செயல்பட்டு வருகிறது. அஜித்பவார் தரப்பு தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவார் இருக்கும்போதே, கட்சியை உடைத்த அஜித்பவார், பிரபுல் பட்டேல் போன்ற தலைவர்கள் தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என உரிமை கோருவதை தேர்தல் ஆணையம் உணர வேண்டும். சரத்பவார் கட்சி உடைந்தது தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணையில் கூட கலந்து கொண்டார்.

மக்கள் சிரிப்பார்கள்

பா.ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டால் கூட, சித்தாந்தம் அசல் கட்சியில் தான் இருக்கும். யாராவது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் என கூறினால் மக்கள் சிரிப்பார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story