சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் - உ.பி. அரசு திட்டவட்டம்
சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த கருத்தை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பாஜக உத்தரவிட்டது. பாஜகவை சேர்ந்த நவீன் ஜீண்டாலையும் பாஜக கட்சியில் இருந்து நீக்கியது.
இதற்கிடையில், மத கடவுளின் இறை தூதரை அவமதித்ததாக கூறி பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்த கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களையும், சாலைகளை மறித்தும், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தியதால் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால், நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் இன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவரச ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சமூகவிரோத சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும், உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சட்டத்தை கையில் எடுக்கும் நபர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்' என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.