அசாமில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி
அசாமில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலியாகின.
யானைக்கூட்டம்
அசாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் பனிசந்தா என்ற கிராமத்தையொட்டி ஒரு பாக்குமரத் தோட்டம் உள்ளது. இரை தேடி நேற்று முன்தினம் நள்ளிரவு இங்கு ஒரு யானைக்கூட்டம் புகுந்தது. அதில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகின. அதிகாலை 2.30 மணியளவில் யானைகளின் ஓசையைக் கேட்ட கிராமத்தினர், அவை உணவு தேடி வந்திருக்கின்றன என நினைத்து வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்துவிட்டனர். காலையில் யானைகளின் உடல்களை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மனிதர்கள் காரணமில்லை
'யானைக்கூட்டம் பாக்குமரத் தோட்டம் வழியாக சென்றபோது, அதனால் முறிக்கப்பட்ட ஒரு பாக்குமரம், மின்சாரக் கம்பிகளின் மீது விழுந்துள்ளது. அப்போது அறுந்து விழுந்த மின்சாரக் கம்பிகளில் இருந்து மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலியாகியிருக்கின்றன. மற்றபடி, யானைகளின் சாவுக்கு மனிதர்கள் காரணமில்லை என தோன்றுகிறது. ஆனாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்துவருகிறோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராமத்தினர் அஞ்சலி
இறந்த யானைகளின் உடல்கள் மீது கிராம மக்கள் பூக்களை போட்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்து புதைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.