சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 போலீசார் பலி


சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 போலீசார் பலி
x

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 போலீசார் பலியாகினர்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம்

நமது நாட்டில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் ஒன்று, வட மாநிலமான சத்தீஷ்கார். அங்கு அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பதுங்கி இருந்து கொண்டு நக்சலைட்டுகள் அவ்வப்போது குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த 20-ந்தேதியன்று ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் 2 போலீசார் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தேடுதல் வேட்டை

இந்த நிலையில் அங்கு தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ. தொலைவில், சுக்மா மாவட்டத்தில் ஜகர்குண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அந்த நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் காலையில் போலீசார் இறங்கினர்.

துப்பாக்கிச்சண்டை

காலை 9 மணியளவில் ஜகர்குண்டா மற்றும் குண்டெட் கிராமங்களுக்கு இடையே போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களைக் கண்டதும் நக்சலைட்டுகள் சரமாரியாக சுடத்தொடங்கினர். போலீசாரும் சரியான பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதன் முடிவில், 3 போலீசார் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பலியானார்கள். அவர்கள் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமுராம் நாக் (வயது 36), போலீசார் குஞ்சம் ஜோகா (33), வஞ்சம் பீமா (31) ஆவார்கள்.

இந்த சண்டையின் முடிவில் நக்சலைட்டுகள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பலியான போலீசாரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, ஜகர்குண்டா ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

6 நக்சலைட்டுகள் பலி

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இந்த துப்பாக்கிச்சண்டையில் 6 நக்சலைட்டுகள் பலியானதாகவும், அவர்களின் உடல்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச்சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.


Next Story