திருப்பதி: முக கவசத்தில் பதுக்கி ரூ.94 ஆயிரத்தை திருடிய வங்கி ஊழியர் கைது


திருப்பதி: முக கவசத்தில் பதுக்கி ரூ.94 ஆயிரத்தை திருடிய வங்கி ஊழியர் கைது
x

திருப்பதியில் : முக கவசத்தில் பதுக்கி ரூ.94 ஆயிரத்தை திருடிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருமலை,

திருப்பதி மாவட்டம் சந்திரகிரியைச் சேர்ந்தவர் ஏ.திலீப். இவர், அங்குள்ள ஒரு வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், ஒரு வருடமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பரகாமணி சேவையில் பணியாற்றி வந்தார்.

வழக்கமான சோதனைக்கு பிறகு 23-ந்தேதி காலை 7.30 மணியளவில் பரகாமணி சேவைக்கு வந்தார். மதியம் 2.30 மணியளவில் வெளியே வந்த அவரை பாதுகாப்புப் பணியாளர்கள் சோதனைச் செய்தனர். அவர் அணிந்திருந்த முகக் கவசத்தை (மாஸ்க்) கழற்றி சோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 47 பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை, தேவஸ்தான ஊழியர்கள் திருமலை 1-டவுன் போலீசில் ஒப்படைத்தனர். கண்காணிப்பு கேமராவிலும் அவர் பணத்தை பதுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார், திலீப்பை கைது செய்தனர். காணிக்கை பணத்தை பறிமுதல் செய்தனர்.

பொதுவாக பரகாமணி சேவையில் ஈடுபடுவோருக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முக கவசம் வழங்குவார்கள். ஆனால், திலிப், தேவஸ்தான அதிகாரிகள் கொடுத்த முகக் கவசத்தை அணியாமல், சிவப்பு நிற முக கவசம் அணிந்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. சோதனையில் அவர் கையும் களவுமாக சிக்கினார்.

மேலும் கைதான திலீப் ஏற்கனவே லட்டு கவுண்ட்டரில் வேலை செய்தபோது, டோக்கன்களை திருடி பக்தர்களுக்கு விற்பனை செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story