இறைச்சி சாப்பிட்டு கோவிலுக்கு சென்று சி.டி.ரவி தரிசனம் செய்ததாக சர்ச்சை
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி இறைச்சி சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தான் கோவிலுக்குள் செல்லவில்லை என சி.டி.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி இறைச்சி சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தான் கோவிலுக்குள் செல்லவில்லை என சி.டி.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
இறைச்சி சாப்பிட்டு விட்டு...
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக இருந்து வருபவர் சி.டி.ரவி.. இவர், கடந்த 19-ந் தேதி உத்தரகன்னடா மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர், பா.ஜனதா எம்.எல்.ஏ.வான சுனில்நாயக் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் வழங்கிய இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவை சி.டி.ரவி சாப்பிட்டு இருந்தார். அதன்பிறகு, உத்தரகன்னடாவில் உள்ள கோவிலுக்கு சென்று சி.டி.ரவி சாமி தரிசனம் செய்ததாக புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இறைச்சி சாப்பிட்டு விட்டு சி.டி.ரவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மேலும் மீன் சாப்பிட்டு விட்டு தர்மஸ்தலா கோவிலுக்கு சித்தராமையா சென்றதை பா.ஜனதாவினர் பரபரப்பாக பேசியதாகவும், தற்போது சி.டி.ரவி இறைச்சி சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு சென்றது குறித்து பா.ஜனதா தலைவர்கள் பேசாமல் இருப்பது ஏன்? என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
கோவிலுக்குள் செல்லவில்லை
இந்த நிலையில், அசைவ உணவு சாப்பிடும் சாதியில் பிறந்தவன் நான், உத்தரகன்னடா சுற்றுப்பயணத்தின் போது பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் இறைச்சி சாப்பிட்டது உண்மை தான் என்றும், ஆஞ்சநேயா சாமி கோவிலுக்குள் தான் செல்லவில்லை என்றும், கோவிலுக்கு வெளியே சாலையில் நின்று தான் சாமி தரிசனம் செய்ததாகவும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிப்பதாகவும் சி.டி.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், நான் மீன் சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் சென்றதாக கூறி பா.ஜனதாவினர் அரசியல் செய்தார்கள். அதுபோல், சி.டி.ரவி விவகாரத்திலும் அரசியல் செய்ய விரும்பவில்லை. பா.ஜனதா ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அதுபற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். பா.ஜனதாவினர் போல் எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்வதில்லை, என்றார்.