பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க வாய்ப்பு..!!


பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க வாய்ப்பு..!!
x

கோப்புப்படம்

பாட்னாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்க திட்டமிட்டு வருகின்றன. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஒடிசா மாநில முதல்-மந்திரிகளையும் சந்தித்து இருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இந்த கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் அடுத்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி நடைபெறும் என தெரிகிறது.

கருத்துகளை வழங்குவார்

எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக அந்த கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகையில், 'பீகாரில் அடுத்த மாதம் நடைெபறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என தெரிகிறது. 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி அமைத்தல் மற்றும் அதை பலப்படுத்துவதற்காக தனது கருத்துகளை அப்போது அவர் எடுத்துரைப்பார்' என்று தெரிவித்தார்.

முன்னதாக எதிர்க்கட்சி ஒற்றுமை தொடர்பாக கடந்த மாதம் நிதிஷ் குமார், மம்தா பானர்ஜியை சந்தித்தபோது, எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை பீகாரில் நடத்துவதற்கான யோசனையை மம்தா பானர்ஜிதான் தெரிவித்து இருந்தார்.

காங்கிரசுக்கு ஆதரவு

பீகாரின் புகழ்பெற்ற தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணை நினைவு கூர்ந்து இந்த கருத்தை அவர் முன் வைத்திருந்தார். இதன் மூலம் எதிர்க்கட்சி ஒற்றுமை விவகாரத்தில் தனது விருப்பத்தை அவர் பதிவு செய்திருந்தார்.

இதைப்போல கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து, காங்கிரஸ் வலிமையாக இருக்கும் மாநிலங்களில் அந்த கட்சியை ஆதரிக்க தயார் எனவும் மம்தா பானர்ஜி அறிவித்தார். அதேநேரம் பிராந்திய கட்சிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் அவற்றை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பதில் மம்தா பானர்ஜியின் நோக்கம் தெளிவாக வெளிப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.


Next Story