மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங். தொடர்ந்து வெற்றி முகம்
மேற்கு வங்காளத்தில் பயங்கர வன்முறைக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளது.
கொல்கத்தா,
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே இந்த உள்ளாட்சி தேர்தல் களம் பெரும் வன்முறை சம்பவங்களை சந்தித்தது. இதில் உச்சபட்சமாக வாக்குப்பதிவு நாளான கடந்த 8-ந்தேதி நடந்த வன்முறையில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதில் தொடக்கம் முதலே ஆளும் திரிணாமுல் காங்கிரசின் கையே ஓங்கி இருந்தது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என அனைத்து பிரிவுகளிலும் பெரும்பாலான இடங்களில் இந்த கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றிருந்தனர்.
ஊராட்சி வார்டுகள்
திரிணாமுல் காங்கிரசின் இந்த வெற்றி முகம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.
நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 63,229 கிராம ஊராட்சி வார்டுகளில், 34,901 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. அத்துடன் 613 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. எதிர்க்கட்சியான பா.ஜனதா, 2-ம் இடத்தை பெற்றிருந்தது. அந்த கட்சி வேட்பாளர்கள் 9,719 வார்டுகளை கைப்பற்றி, 151 இடங்களில் முன்னணியில் இருந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2,938 இடங்களில் வெற்றியும், 67 இடங்களில் முன்னிலையிலும் இருந்தது. காங்கிரஸ் கட்சி 2,542 இடங்களில் வெற்றியும், 66 வார்டுகளில் முன்னிலையும் பெற்றிருந்தது.
மக்களின் வெற்றி
இதைப்போல ஊராட்சி ஒன்றிய தேர்தலிலும் ஆளுங்கட்சியின் கையே ஓங்கியிருந்தது. மொத்தமுள்ள 9,728 வார்டுகளில் இந்த கட்சி வேட்பாளர்கள் 6,430 இடங்களை கைப்பற்றி இருந்தனர். 193 வார்டுகளில் முன்னிலையிலும் இருந்தனர்.
பா.ஜனதா 982 வார்டுகளில் வெற்றியும், 53 இடங்களில் முன்னிலையும் பெற்றிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி 176, முன்னிலை 14 என்ற நிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 266 இடங்களில் வெற்றி, 6 வார்டுகளில் முன்னிலை என்றிருந்தது.
மேலும் 928 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் 674 இடங்களும், பா.ஜனதா 21 இடங்களும் பெற்றிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒற்றை இலக்க இடங்களை கைப்பற்றி இருந்தன.
கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இது மக்களின் வெற்றி என அந்த கட்சி கூறியுள்ளது.
மீண்டும் வன்முறை
ஆனால் வன்முறை சம்பவங்களை முன்வைத்து மாநில அரசையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறியுள்ளன.
இதற்கிடையே வாக்கு எண்ணிக்கையையொட்டி நடந்த வன்முறையிலும் சிலர் கொல்லப்பட்டனர். அந்தவகையில் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.
மால்டா மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் நடந்த வன்முறையில் காங்கிரஸ் தொணடர் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இவ்வாறு நீடித்து வரும் வன்முறையால் மாநிலம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது.