காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ உயரதிகாரிகள் பலி; பாகிஸ்தான் தேசிய கொடியுடன் கூடிய உருவ பொம்மை எரிப்பு


காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ உயரதிகாரிகள் பலி; பாகிஸ்தான் தேசிய கொடியுடன் கூடிய உருவ பொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 14 Sept 2023 12:26 PM IST (Updated: 14 Sept 2023 2:13 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் ராணுவ மேஜர், கர்னல் மற்றும் டி.எஸ்.பி. ஒருவர் பயங்கரவாதிகளுடனான என்கவுண்ட்டரில் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வின் இளைஞரணி தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நர்லா பகுதியில் கடந்த 7-ந்தேதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளின் இயக்கம் பற்றி இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் கண்காணித்து வந்தனர்.

அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களாக என்கவுண்ட்டரில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலின்போது, லேபரடார் வகையை சேர்ந்த ராணுவத்தின் பெண் மோப்ப நாய் கென்ட் (வயது 6) முன்னே பாய்ந்து உயிரிழந்தது. தன்னுடைய பாதுகாவலரை பாதுகாக்கும் வகையில் அது உயிர் தியாகம் செய்தது. அதன் இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றன.

இந்நிலையில், என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதன்பின்னர், அந்த பகுதியில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட போர் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. அந்த மருந்து பொருட்களில், பாகிஸ்தான் நாட்டின் அடையாளங்கள் தென்பட்டன.

இந்தியாவுக்குள் வெளிநாட்டு பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து, அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்று இந்திய ராணுவம் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் திடீரென நேற்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவை வழிநடத்தி செல்லும் ராணுவ கர்னல் ஒருவர் மற்றும் ராணுவ மேஜர் என 2 ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்தனர். பின்பு டி.எஸ்.பி. ஒருவரும் பலியானார். கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோனக் மற்றும் டி.எஸ்.பி. ஹுமாயூன் பட் ஆகிய 3 உயரதிகாரிகள் பலியானார்கள்.

ஜம்முவில் ராணுவ மேஜர், கர்னல் மற்றும் டி.எஸ்.பி. என 3 பேர் பயங்கரவாதிகளுடனான என்கவுண்ட்டரில் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வின் இளைஞரணி தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் கூடிய உருவ பொம்மையை சாலையில் தீயிட்டு எரித்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story