போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசியம்


போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசியம்
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 PM GMT (Updated: 17 Feb 2023 6:46 PM GMT)

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று சிறப்பு போலீஸ் கமிஷனர் எம்.ஏ.சலீம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று சிறப்பு போலீஸ் கமிஷனர் எம்.ஏ.சலீம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவுக்கு 2-வது இடம்

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், டாம் டாம் என்ற தனியார் நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு வாகன நெரிசல் குறித்து ஆய்வு நடத்தி இருந்தது. உலக அளவில் இந்த ஆய்வு முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு முதலிடம், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 2-வது இடமும் கொடுக்கப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் ஆகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து போக்குவரத்து சிறப்பு கமிஷனர் எம்.ஏ. சலீமிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஒத்துழைப்பு அவசியம்

டாம் டாம் எந்த அடிப்படையில் இந்த ஆய்வை நடத்தி இருந்தது என்பது தெரியவில்லை. அதுபற்றிய முழுமையான தகவல்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது இடத்தில் இருக்கும் பெங்களூருவில் வரும் ஆய்வுகளில் 50-வது இடத்திற்கு செல்லும்.

தற்போது பெங்களூருவில் எடுத்து வரும் சில நடவடிக்கைகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் போக்குவரத்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு எம்.ஏ.சலீம் கூறினார்.


Next Story