கர்நாடக சட்டசபைக்கு புதிய தேர்வான எம்.எல்.ஏ.க்களுக்கு 3 நாள் பயிற்சி


கர்நாடக சட்டசபைக்கு புதிய தேர்வான எம்.எல்.ஏ.க்களுக்கு 3 நாள் பயிற்சி
x
தினத்தந்தி 26 Jun 2023 3:33 AM IST (Updated: 26 Jun 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் 3-ந்தேதி தொடங்கும் நிலையில், அவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் 70 பேருக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை இன்று (திங்கட்கிழமை) முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் 3-ந்தேதி தொடங்கும் நிலையில், அவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் 70 பேருக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை இன்று (திங்கட்கிழமை) முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

70 எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி

கர்நாடகத்தில் 16-வது சட்டசபைக்கு கடந்த மாதம் (மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும், பா.ஜனதா 66 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் 3 கட்சிகள் சார்பிலும் புதிதாக 70 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பின்பு முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் ஜூலை 7-ந் தேதி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

மாநிலத்தில் புதிய அரசு அமைந்திருப்பதால் வருகிற 3-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்ற உள்ளார். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக மாநிலத்தில் புதிதாக வெற்றி பெற்றுள்ள 70 எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று சபாநாயகர் யு.டி.காதர் அறிவித்து இருந்தார்.

சித்தராமையா தொடங்கி வைக்கிறார்

அதன்படி, புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாட்கள் பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக சபாநாயகர் யு.டி.காதர் தெரிவித்துள்ளார். இந்த 3 நாட்கள் பயிற்சி முகாம் பெங்களூரு மாவட்டம் நெலமங்களாவில் நடைபெற உள்ளது. புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சி முகாமை இன்று மதியம் 12 மணியளவில் முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்க உள்ளார்.

பயிற்சி முகாமுக்கு சபாநாயகர் யு.டி.காதர் தலைமை தாங்குகிறார். துணை முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமார் பங்கேற்க உள்ளார். சிறப்பு விருந்தினராக சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் பங்கேற்று சட்டசபையில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்கி பேச உள்ளார். மேலும் மந்திரிகள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், ஜமீர் அகமதுகானும் பங்கேற்று எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

முன்னாள் முதல்-மந்திரிகள்...

3 நாட்களும் தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இந்த பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் மூத்த எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். சட்டசபையில் எந்த விவாதங்களில் எப்படி பேச வேண்டும் உள்ளிட்டவை குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.அத்துடன் தினமும் மாலையில் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோரும் சட்டசபையில் நடந்த தங்களது அனுபவங்களை புதிய எம்.எல்.ஏ.க்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

மத குருக்கள் பங்கேற்பு

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு நடைபெறும் பயிற்சி முகாமில் சில மதங்களின் குருக்கள் கலந்து கொள்வார்கள் என்று சபாநாயகர் யு.டி.காதர் அறிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தனது முடிவில் இருந்து சபாநாயகர் யு.டி.காதர் பின்வாங்கவில்லை.

அதன்படி, தர்மஸ்தலா தர்ம அதிகாரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான வீரேந்திர ஹெக்டே, முகமது மற்றும் பிற மத குருக்களும் எம்.எல். ஏ.க்களும் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறார்கள்.


Next Story