ஒடிசா ரெயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ்...? பா.ஜ.க. அடுக்கடுக்காக குற்றச்சாட்டு


ஒடிசா ரெயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ்...? பா.ஜ.க. அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
x

2 ரெயில்வே அதிகாரிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி கிடைத்தது? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என பா.ஜ.க.வால் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த தினேஷ் திரிவேதி கூறும்போது, இன்டர்லாக் சிஸ்டம் கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது, பெயில்-சேப் எனப்படும் சாதனம் வேலை செய்ய தொடங்கும்.

அனைத்து சிக்னல்களும் சிவப்பு வண்ணத்திற்கு வந்து விடும் என கூறியுள்ளார். அதனால், ஒரு சில வினாடிகளில் திட்டமிடப்பட்டு இந்த சதிசெயல் நடந்திருக்க கூடும் என கூறியுள்ளார்.

இந்த விபத்தில், பச்சை சிக்னல் கிடைத்த பின்னரே, முன்னேறி சென்றோம் என சென்னை ரெயிலின் ஓட்டுனர் கூறியுள்ளார். எனினும், பச்சை சிக்னல் விழுந்த பின்னர், ரெயில் கடந்து சென்றி சில வினாடிகளில் உடனடியாக சிவப்பு சிக்னல் விழுந்தது என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

ரெயில் கடந்து சென்ற பின்னர் சிக்னலை பற்றி ஓட்டுனர் கவனிக்க சாத்தியம் இல்லாத சூழலில் விபத்து நடந்து உள்ளது. இதனால், சிக்னல் மாறுவதில் சதி திட்டம் பற்றிய பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காள முதல்-மந்திரியாவதற்காக மம்தா பானர்ஜி, மத்திய ரெயில்வே மந்திரி பதவியில் இருந்து விலகியதும், தினேஷ் திரிவேதி மத்திய ரெயில்வே மந்திரியானார்.

இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான, பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி கூறும்போது, ஒடிசா ரெயில் விபத்துக்கு பின்னணியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இரண்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடல்கள் எப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ், 2 ரெயில்வே அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடலை தனது டுவிட்டரில் ஆடியோ பதிவாக வெளியிட்டார். இதனை குறிப்பிட்டே சுவேந்து கூறியுள்ளார்.

சம்பவம் ஒடிசாவில் நடந்தபோதும், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டுவது பற்றியும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரெயில் விபத்து சம்பவத்தில் அரசியல் மோதலும் காணப்படுகிறது. பயணிகள் பாதுகாப்பை மத்திய அரசு அலட்சியப்படுத்தி விட்டது என்றும் அதனால் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக கோரியும், திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

ஆனால், என்ன பேசுகிறோம் என்ற கவனமே இல்லாமல் இயந்திரம் ஓடுவது போன்று விரைவாக பேசி வருகிறார் என மம்தா பானர்ஜியை பா.ஜ.க. தாக்கி உள்ளது.

இந்த விபத்தில் விசாரணை நடத்துவது உண்மையை வெளிக்கொண்டு வரும் என கூறிய பா.ஜ.க., ரெயில்வே மந்திரியாக மம்தா பானர்ஜி இருந்தபோதும் ரெயில் விபத்துகள் நடந்து உள்ளன என நினைவுப்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 நாட்களுக்கு பின்னர், அந்த பகுதியில் நேற்று முதல் ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.


Next Story