பா.ஜனதாவில் இணைய விலை பேசப்பட்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் வருவதாக புகார் போலீசார் விசாரணை
பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி சிலர் அணுகியதாக சில எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிைய சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் மர்ம நபர்கள் விலை பேசியதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி சிலர் அணுகியதாக சில எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர்.
இதில் பைலட் ரோகித் ரெட்டி என்ற எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை மாநில அரசு அமைத்து உள்ளது.
இந்த நிலையில் மேற்படி புகார் கூறிய பைலட் ரோகித் ரெட்டி, ஹர்ஷவர்தன் ரெட்டி, ரெகா கந்தராவ், கவ்வல பாலராஜு ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போது மிரட்டல் போன் அழைப்புகள் வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. இந்த மிரட்டல் விவகாரம் மாநிலத்தில் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.