புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 2 Jan 2024 5:00 PM GMT (Updated: 2 Jan 2024 5:04 PM GMT)

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு லாரி ஓட்டுநர்கள் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள அச்சட்டங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.

அதில், சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி, டிரக், பேருந்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எந்த ஒரு டிரைவரும் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துவது இல்லை. அதற்காக 3 ஆண்டுகள் இருந்த தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்றது.என டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

புதிய தண்டனைச் சட்டத்தில் உள்ள இந்த விதிக்கு எதிராக மராட்டிய மாநிலத்தில் பல இடங்களில் லாரி டிரைவர்கள் 'ரஸ்தா ரோகோ' என்ற பெயரில் போராட்டங்களை நடத்தினர். டிரைவர்களின் இந்த போராட்டத்தால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இந்நிலையில் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அரசு மற்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அனைத்து ஓட்டுநர்களையும் அவர்களின் பணிகளுக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் மற்றும் விதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும், BNS இன் பிரிவு 106 (2) குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், அதை அரசாங்கம் திறந்த மனதுடன் பரிசீலிக்கும் என்றும் பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story