உத்தரபிரதேசத்தில் போலீஸ்காரர் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை


உத்தரபிரதேசத்தில் போலீஸ்காரர் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் போலீஸ்காரர் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை புறக்காவல் நிலையம் ஒன்றில் பேட்ஜீத் சிங் என்ற போலீஸ்காரர் கடந்த வாரம் பணியில் இருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை அவர் நிறுத்தச் சொன்னபோது அவர்கள் நிற்காமல் சென்றனர். அதையடுத்து அவர்களை துரத்திச் சென்ற அந்த போலீஸ்காரரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் கூட்டுப்படையினர், உமேஷ், ரமேஷ் என்ற அந்த ரவுடிகள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் ஜலான் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை பகுதியில் அந்த ரவுடிகள் இருவரும் மறைந்திருக்கும் தகவல் அறிந்து அங்கு கூட்டுப்படையினர் நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களை நோக்கி ரவுடிகள் இருவரும் சரமாரியாக சுட்டனர். அதில் போலீசார் சிலர், துப்பாக்கி குண்டு கவச உடை அணிந்திருந்ததால் நூலிழையில் உயிர்தப்பினர். போலீசார் திருப்பிச் சுட்டதில் ரவுடிகள் உமேசும், ரமேசும் குண்டு காயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் கையில் குண்டு காயம் அடைந்த ஒரு இன்ஸ்பெக்டர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகளிடம் இருந்து ஒரு உரிமம் பெறாத கைத்துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டா கொள்கலன்களை போலீசார் கைப்பற்றினர்.


Next Story