வீட்டின் முன்பு ஆட்டோ நிறுத்துவதில் இரு குடும்பத்தினர் மோதல்: 8 பேர் காயம்


வீட்டின் முன்பு ஆட்டோ நிறுத்துவதில் இரு குடும்பத்தினர் மோதல்: 8 பேர் காயம்
x

மோதல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு குமாரசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். ஆட்டோ டிரைவர். இவர் அந்தப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டில் சையது தாகா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் தனது வீட்டின் முன்பு தன்னுடைய ஆட்டோவை நிறுத்தி உள்ளார். அதே இடத்தில் சையது தாகாவும் தனது ஆட்டோவை நிறுத்தி உள்ளார். இதுகுறித்து சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், சையது தாகாவிடம் கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில், அங்கு வந்த சிலர், சிவக்குமாருடன் தகராறு செய்தனர். இந்த தகராறு முற்றி மோதலாக மாறியது. அப்போது, சிவக்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சையது தாகாவின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கினர். இதில் சிறுவன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குமாரசாமி லே-அவுட் போலீசார் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதல் தொடர்பாக அப்ரின் பாஷா, சையது தாகா, கரீம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக சிவக்குமார் அளித்த புகாரில், தனது வீட்டில் காவி கொடி பறக்கவிட்டதாகவும், அதனால் தன்னை சையது தாகா திட்டமிட்டு தாக்கியதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story