ஐதராபாத்தில் மேலும் ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
குற்றவாளிகளான வாடகை கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 28-ந்தேதி 17 வயது சிறுமியை 5 பேர் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 31-ந்தேதி, இரவு சுமார் 10 மணியளவில், மைனர் பெண் ஒருவர் ஷாகின் நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக வாடகை கார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்படி கார் வந்ததும் அதில் அவர் ஏறிச்சென்றுள்ளார்.
அந்த காரின் ஓட்டுநர் ஷேக் காலிம் அலி, செல்லும் வழியில் தனது நண்பரான முகமது லுக்மான் அகமது யஸ்தானி என்ற நபரை காரில் ஏற்றியுள்ளார். இருவரும் சேர்ந்து சிறுமியை கோன்டர்க் கிராமத்தில் உள்ள முகமது லுக்மானின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பிறகு அந்த சிறுமியை அதிகாலை 5 மணியளவில் சுல்தான்ஷாகி பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.
இதனிடையே சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர், முகல்புரா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்படி போலீசார் 363-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதையடுத்து ஜூன் 1-ந்தேதி அதிகாலை, சுல்தான்ஷாகி பகுதியில் சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகளான ஷேக் காலிம் அலி மற்றும் முகமது லுக்மான் அகமது யஸ்தானி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து சிறுமி காணாமல் போன வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.