மியன்மாரில் தமிழர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ளது மோரே என்ற நகரம். இங்கு வசித்து வந்தவர்கள் பி.மோகன், வயது 28 மற்றும் எம்.அய்யனாா் வயது 35.
இவர்கள் 2 பேருமே வம்சாவளி தமிழர்கள் ஆவர். இதில் மோகன் என்பவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். அய்யனார், தான் வசிக்கும் பகுதியிலேயே சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, இவா்கள் 2 பேரையும் மியான்மா் எல்லையில் உள்ள டாமு என்ற இடத்தில் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர்.அந்த பகுதியில் உள்ளவர்கள் இவர்களின் உடல்களை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மோரேயில் உள்ள தமிழ்ச் சங்கத்தினா் கூறுகையில், "தமிழா்கள் இருவரையும் உளவாளிகள் என்று நினைத்து மியான்மா் ராணுவத்தினா் சுட்டுக் கொன்றிருக்கலாம்" என்றனர்.. மியான்மரை பொறுத்தவரை, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.. இதைத்தொடா்ந்து, அந்த நாட்டுடனான சா்வதேச எல்லை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி மூடப்பட்டிருக்கிறது.. இருந்தாலும், வா்த்தக தேவைகளுக்காக இரு நாட்டு மக்களும் எல்லைகளைக் கடந்து வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில், கொல்லப்பட்ட தமிழர்களும் அந்த வழியாக சென்றிருக்கலாம் என்றும் தமிழ்ச் சங்கத்தினா் கூறுகிறார்கள்.. ஆனால், போலீசார் தரப்பிலோ வேறு விதமாக சொல்லப்படுகிறது. இவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, 2 பேரையும் காணவில்லை என்று காவல்துறையில் இரு தரப்பினர் சார்பாக புகார் அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களை மியான்மர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.