பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து உத்தவ் தாக்கரே விமர்சனம்


பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து உத்தவ் தாக்கரே விமர்சனம்
x
தினத்தந்தி 11 Feb 2024 6:03 PM GMT (Updated: 12 Feb 2024 7:52 AM GMT)

சமீபத்தில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி நரசிம்ம ராவ் ஆகியோருக்கும், எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளை செய்பவர்களுக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.

அதேபோல், கடந்த 4 -ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி நரசிம்ம ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

"முன்பெல்லாம் ஆண்டுக்கு எத்தனை பேருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தன. ஆனால், தற்போது தனது மனதிற்கு தோன்றுபவர்களுக்கு எல்லாம் பாரத ரத்னா விருதினை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். தவறான ஆட்களுக்கு கொடுப்பதாக கூறவில்லை. ஆனால் பீகார் மக்களின் வாக்குகளை பெறவே கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளனர்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story