ஜனாதிபதி பற்றி உதித் ராஜ் சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்க மகளிர் ஆணையம் வலியுறுத்தல்


ஜனாதிபதி பற்றி உதித் ராஜ் சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்க மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் சர்ச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென பா.ஜ.க., தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.



புதுடெல்லி,


ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ் பேசும்போது, அவரை அவதூறு மற்றும் புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். முன்னாள் பா.ஜ.க. நபரான ராஜ், முர்முவை கொத்தடிமை என்ற வகையில் பேசியுள்ளார்.

நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியை புண்படுத்தியதற்காக, ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில் பேசும்போது, நாட்டின் 76 சதவீதம் உப்பு குஜராத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் குஜராத்தின் உப்பையே சாப்பிடுகிறார்கள் என கூறலாம் என்று பேசினார்.

அவர், குஜராத் பெருமளவில் உப்பு உற்பத்தி செய்கிறது என்ற விதத்திலேயே கூறியுள்ளார். ஆனால், அந்த உப்பை நீங்கள் சற்று உபயோகியுங்கள் அல்லது அதற்கு முயற்சி செய்யுங்கள் என முர்முவை சாடி உதித் ராஜ் பேசியுள்ளார்.

உதித்தின் இந்த கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலித் சமூகத்தில் இருந்து வந்து, பழங்குடியினரை போன்று வரலாற்று ரீதியாக வறுமையின் பிடியில் இருந்து வந்தவரான ராஜ் தனது டுவிட்டரில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை கேள்வி கேட்பது என்பது எனது கடமை என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், முர்மு பற்றி நான் கூறியது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதற்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்புமில்லை. வேட்பாளர் மற்றும் பிரசாரத்தின்போது, ஆதிவாசி என்ற வகையில் முர்மு பேசினார்.

ஆனால், அதன்பின்னர் அவர் ஆதிவாசியாக நடக்கவில்லை. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்தில் இருந்து ஒருவர் உயர் பதவிக்கு வரும்போது, அவர்கள் தங்களது சமூகத்தினரை கைவிட்டு விட்டு, அமைதியாகி விடுகின்றனர் என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.


Next Story