காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம்


காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம்
x

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது மற்ற அடிப்படை உரிமைகளை போல் புனிதமானது என்றும் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நாளிதழான 'தி நியூயார்க் டைம்ஸ்' அண்மையில் காஷ்மீரில் பத்திரிக்கை சுதந்திரம் குறித்த தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், காஷ்மீரில் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், காஷ்மீர் குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

"நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டது. அந்த நாளிதழ், காஷ்மீர் குறித்த செய்தியை தவறாகவும், கற்பனையாகவும் வெளியிட்டது மட்டுமின்றி, இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள் குறித்து பொய் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வெளியிட்டு உள்ளது.

இந்தியா குறித்தும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் பொய் பரப்புவது என்ற நோக்கத்தில் அமெரிக்க நாளிதழ் மற்றும் அதேபோன்று ஒத்த எண்ணம் கொண்ட வெளிநாட்டு மீடியாக்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது காஷ்மீர் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பொய் செய்திகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது. இந்தியா மீதும், நமது பிரதமர் மீதும் வெறுப்புணர்வை வளர்க்கும் எண்ணம் கொண்ட சில வெளிநாட்டு மீடியாக்கள், நீண்ட காலமாக நமது ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய பொய்களை பரப்ப முயற்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது மற்ற அடிப்படை உரிமைகளை போல் புனிதமானது. நமது மக்கள் முதிர்ச்சி பெற்றவர்கள். ஜனநாயகம் குறித்து யாரும் நமக்கு பாடம் எடுக்க தேவையில்லை.

காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் செய்தி கண்டனத்திற்குரியது. இத்தகைய திட்டங்களை இந்திய மண்ணில் வெற்றி பெற இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்."

இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.


Next Story