உகாண்டா, மொசாம்பிக் நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம்
உகாண்டா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய வெளிவிவகார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை முதல் 3 நாட்களுக்கு உகாண்டா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தில் உகாண்டா வெளியுறவு மந்திரியான ஜேஜே ஒடாங்காவை சந்தித்து பேசுகிறார். பிற மந்திரிகளுடனும் சந்திப்பு நடைபெறுகிறது. இதன்பின் இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்படும் என கூறப்படுகிறது.
இந்த பயணத்தில் வர்த்தக மற்றும் தொழில்துறை சமூகத்தினர் முன்னிலையில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றுகிறார். தவிர, இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாடுகிறார்.
இதனை தொடர்ந்து வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் மொசாம்பிக் நாட்டில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொசாம்பிக் குடியரசு நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய வெளிவிவகார மந்திரியின் பயணம் இதுவாகும்.
முக்கிய தலைவர்களை சந்தித்து பேசும் அவர், அந்நாட்டு வெளியுறவு மந்திரியான வெரோனிகா மகாமோவுடனான சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில் மொசாம்பிக் நாட்டின் பல்வேறு மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
மொசாம்பிக்கில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாட உள்ளார். உகாண்டா மற்றும் மொசாம்பிக் நாடுகளில் மேற்கொள்ளும் மந்திரி ஜெய்சங்கரின் பயண திட்டத்தினால், இந்த இரு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.