அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உள்கட்டமைப்பு: மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்


அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உள்கட்டமைப்பு: மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 Dec 2023 10:22 PM GMT (Updated: 21 Dec 2023 4:03 AM GMT)

புதிய தொழில்நுட்பத்தில் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் முறை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தானியங்கி முறையில் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் நவீன கேமராக்களை அமைக்கும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு இணையான சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரு விரிவான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, மெட்ரோ நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கவும், சாலை விபத்துகளைக் குறைக்கவும் அரசாங்கம் முயன்று வருகிறது

தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச்சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் நவீன கேமராக்களை (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா) அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள் என்று இருந்தது. பின்னர் 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் 'பாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைக்கப்பட்டது. இருப்பினும் 'பீக் ஹவர்ஸ்' சமயங்களில் சுங்கச்சாவடிகளில் இன்னும் சில தாமதங்கள் உள்ளன. நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவைக் குறைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.


Next Story