தலித் பெண் சமையல் செய்வதால் அங்கன்வாடிக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு


தலித் பெண் சமையல் செய்வதால் அங்கன்வாடிக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
x

பீதர் அருகே, தலித் பெண் சமையல் செய்வதால் அங்கன்வாடிக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பசவண்ணர் பிறந்த பூமியில் தான் இந்த கொடுமை சம்பவம் நடந்து உள்ளது.

பீதர்

பீதர் அருகே, தலித் பெண் சமையல் செய்வதால் அங்கன்வாடிக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பசவண்ணர் பிறந்த பூமியில் தான் இந்த கொடுமை சம்பவம் நடந்து உள்ளது.

தலித் பெண் நியமனம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் சில பகுதிகளில் இன்னும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. கர்நாடகத்திலும் ஒரு குக்கிராமத்திலும், அங்கன்வாடியில் பணியாற்றும் பெண் ஒருவர் தீண்டாமையை அனுபவித்து வருகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

வடகர்நாடகத்தில் உள்ள பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா ஹட்யாலி என்ற கிராமத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு அங்கன்வாடி மையம் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் காலனியிலும், இன்னொரு அங்கன்வாடி மையம் பொது இடத்திலும் செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

தலித் மக்கள் வசிக்கும் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர், சமையல் உதவியாளர் ஆகிய இருவரும் தலித் ஆவார்கள். ஆனால் பொது இடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆசிரியை சுமித்ரா தலித் ஆவார். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அந்த அங்கன்வாடி மையத்தின் உதவியாளராக மிலானாபாய் என்ற தலித் பெண் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கொரோனா காரணமாக அந்த அங்கன்வாடி மையம் மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த அங்கன்வாடி மையம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த அங்கன்வாடி மையத்தில் படிக்கும் உயர்சாதி பிள்ளைகள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பிள்ளைகளின் வீடுகளுக்கு சென்ற மிலானாபாய், பிள்ளைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பி வைக்கும்படி பெற்றோரிடம் கேட்டு கொண்டார். ஆனால் நீ சமைத்த உணவை சாப்பிட எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

பசவண்ணர் பிறந்த பூமியில்..

மேலும் மிலானாபாயை பணி இடமாற்றம் செய்துவிட்டு, அவருக்கு பதிலாக தங்களது சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று பிள்ளைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர். சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணர் பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் பிறந்த மண்ணில் இப்படி ஒரு தீண்டாமை நடந்து வருகிறது. தீண்டாமையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story