உ.பி.: கனமழைக்கு 9 பேர் பலி; ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம்
உத்தர பிரதேசத்தில் மழையால் சாலைகள் சேதம் அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ரா நகர குடியிருப்புவாசிகள் தங்களது காலனிகளின் பெயர்களை மாற்றம் செய்து உள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளும் வெள்ளநீர் புகுந்து உள்ளது. பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்களும் நீரால் சூழப்பட்டு உள்ளன.
ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு உள்ளேயும் நீர் புகுந்துள்ளது. இதனால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் நேற்று பெய்த தொடர் கனமழையால், நொய்டாவின் பல பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) மழை பெய்யும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா கல்வி வாரியம் மற்றும் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்பட பல்வேறு நகரங்களில் குழந்தைகள் முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது என அரசு அறிவித்து உள்ளது.
அலிகாரில் வருகிற 12-ந்தேதி வரை 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, லக்னோ, நொய்டா, காசியாபாத், கான்பூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த பள்ளிகளும் இன்று மூடப்பட்டு இருக்கும்.
கனமழையை தொடர்ந்து, ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கியதில் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் வசித்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். 8 வளர்ப்பு பிராணிகளும் உயிரிழந்தன. உத்தர பிரதேசத்தில், மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி மொத்தம் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் இல்லாமல் தேங்கி காணப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிட்டு ஆக்ரா நகரில் வசிக்கும் மக்கள் தங்களது காலனிகளின் பெயர்களை நரகபுரி, கீசத் நகர், கினோனா நகர், நள சரோவர் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இதுபற்றி அந்த பகுதியில் வசிப்பவர்களில் ஒருவர் கூறும்போது, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஒவ்வோர் இடத்திலும் சென்று நாங்கள் புகார் அளித்துள்ளோம். ஆனால், அனைத்தும் பலனற்று போய்விட்டன. வாக்குகளுக்காக மட்டுமே அரசியல்வாதிகள் வருகிறார்கள். பின்னர் காணாமல் போய் விடுகிறார்கள் என கூறியுள்ளார்.