நுபுர் சர்மா விவகாரத்தில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு இதுதான் பரிசு - வீடியோ வெளியிட்டு எச்சரித்த பாஜக எம்.எல்.ஏ!


நுபுர் சர்மா விவகாரத்தில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு இதுதான் பரிசு - வீடியோ வெளியிட்டு எச்சரித்த பாஜக எம்.எல்.ஏ!
x

உத்தரபிரதேச சஹாரன்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் கைது செய்யப்படவர்களை போலீசார் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

லக்னோ,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹாரன்பூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை அன்று தீவிர வன்முறைப் போராட்டங்கள் நடந்தன.

இது குறித்து உ.பி. போலீசார் கூறுகையில், பிரயாக்ராஜில், ஒரு கும்பல் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வண்டிகளுக்கு தீ வைத்ததுடன், போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து எரிக்க முயன்றது. போராட்டக்காரர்களை கலைத்து அமைதியை நிலைநாட்ட போலீசார் கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தினர். போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரை வெள்ளிக்கிழமையன்று நடந்த போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்பாக காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் கைது செய்யப்படவர்களை போலீசார் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சஹாரன்பூரில் உள்ள காவல் நிலையத்தில் எடுக்கப்பட்டது. அதில், தடிகளுடன் ஆயுதம் ஏந்திய இரண்டு போலீஸ்காரர்களிடமிருந்து இடைவிடாமல் விழும் அடியை தாங்க முடியாமல், ஒன்பது பேர் கெஞ்சுகிறார்கள். ஆனால் போலீசார் அவர்களை அடித்து சித்திரவதை செய்கிறார்கள்.

இந்த சம்பவத்தின் வீடியோவை உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ஷலப் மணி திரிபாதி தனது டுவிட்டர் பக்கத்தில், 'இதுவே கலகக்காரர்களுக்கு திரும்ப கிடைக்கும் பரிசு' என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பதிவு கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. எம்எல்ஏ ஷலப் மணி திரிபாதி முன்னாள் பத்திரிகையாளர் ஆவார். மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகராக இருந்தார்.

ஏற்கெனவே, உ.பி மாநில நிர்வாகம், குற்றவாளிகள் மற்றும் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அம்மாநில அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது அல்லது அழிப்பது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது சட்டததை மீறும் செயல் என்று பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களை எழுப்பினாலும் அம்மாநில முதல்-மந்திரி செவிசாய்ப்பதாக இல்லை.

இந்த வீடியோ குறித்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "இது போன்ற சம்பவங்கள் நீதி அமைப்பு மீது மக்களின் நம்பிக்கையை கெடுக்கும். காவல்துறை மரணங்களில் நம்பர் 1, மனித உரிமை மீறல்கள் மற்றும் தலித்துகள் மீதான துஷ்பிரயோகங்களில் உத்தரபிரதேசம் முன்னணியில் உள்ளது" என்று அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story